<<JESUS IS COMING SOON>>

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான் (யோவான் 14:6 )


I AM THE WAY JESUS

ஏறத்தாழ 2000 ஆண்டுகட்கு முன் ஆசியா கண்டத்திலுள்ள பாலஸ்தீனா நாட்டில் இயேசு கிறிஸ்து பிறந்தபொழுது தேவதூதன் ஒருவன் இதோ! மக்கள் அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி தரும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகப் பிறந்திருக்கிறார் என்றுக் கூறினான். ஆம்! நம்மெல்லோருக்கும் அது மிகப்பெரிய நற்செய்தியே; ஏனென்றால், பாவிகளாகிய நம்மை இரட்சிக்கவே இயேசு கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார். நாம் எல்லோருமே பாவம் செய்தோம். பாவத்தின் சம்பளம் மரணமே. (மரணம் என்றால் என்றென்றும் தேவனை விட்டுப் பிரிக்கப்பட்டு நரகத்தில் தள்ளப்படுதல் என்று பொருள்). ஆனால் தேவன் அன்பாகவே இருக்கிறார். ஒருவராவது கெட்டுப்போவது அவருடைய விருப்பமில்லை. ஆகையால் தேவன் தமது ஒரே பேறான குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படி அவரைத் தந்து உலகில் அன்பு கூர்ந்தார்.

இயேசு உலகில் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் மனிதனாக வாழ்ந்தார். எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராக இருந்தார். இந்த உலகில் பாவமே செய்யாதவர் அவர் ஒருவர்தான். அவரே மனித உருவில் வெளிப்பட்ட தேவன். அவர் இப்பூமியில் மனிதருடைய சகல பாவங்களை மன்னித்தார். மக்களுக்கிருந்த எல்லா வியாதிகளையும், நோய்களையும் நீக்கியதுடன், சப்பாணி, குருடர், ஊமையர், போன்றோரை சுகப்படுத்தி, மரித்தோர் சிலரையும் எழுப்பினார். அவர் நன்மை செய்பவராகவும், பிசாசின் வல்லமையில் அகப்பட்டவர்களைக் குணமாக்குகிற வராகவும் ஊழியம் செய்தார்.

முடிவில் மனிதகுலத்தின் பாவங்களை நிவர்த்திசெய்கிற பலியாக தம்மைத்தாமே அவர் ஒப்புக்கொடுத்து, சிலுவையில் அறையப்பட்டார். தன்னுடைய பாவமற்ற பரிசுத்த இரத்தத்தைச் சிந்தினார். இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினாலே பாவ மன்னிப்பாகிய மீட்பு நமக்கு உண்டாயிருக்கிறது. இயேசு கிறிஸ்து தமது சரீரத்திலே நமது பாவங்களையும், பெலவீனங்களையும், நோய்களையும் சிலுவையின் மேல் சுமந்தார். பறவைகள், மிருகங்களின் இரத்தமோ அல்லது பலவித மதசடங்குகளோ நம்முடைய பாவங்களை நீக்க முடியாது. இயேசு கிறிஸ்துவின் இரத்தம் மட்டுமே சகல பாவங்களையும் நீக்கி நம்மைச் சுத்திகரிக்கும். அவருடைய தழும்புகளால் நாம் குணமாகிறோம்.

சிலுவையில் அறையப்பட்டு மரித்த இயேசு கிறிஸ்து அப்படியே மண்ணோடு மண்ணாகிப் போய்விடவில்லை. மரணம் அவரைப்பிடித்து வைத்திருக்க முடியவில்லை. அவர் இராஜாதி இராஜாவும், கர்த்தாதி கர்த்தருமாயிருப்பதினால் பிசாசையும், மரணத் தையும் வென்றவராக மூன்றாம் நாளில் உயிரோடு எழுந்தார்! அதன் பின் 40 நாட்கள் தனது சீஷருக்கும், பிறருக்கும் தரிசனமாகி தம்மை உயிரோடிருக்கிறவராகக் காண்பித்தார். பின்பு அவர் பரலோகத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். இயேசு கிறிஸ்து இன்றும் ஜீவிக்கிறார், அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார்.

வருத்தப்பட்டு பாவம், வியாதி, துன்பம் முதலிய பாரம் சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லோரும் என்னிடம் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை என்று இயேசு கூறுகிறார். பாவமன்னிப்பு பெறுவதற்கு வேறு வழியே கிடையாது. நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன் என்று இயேசு கூறுகிறார். பல வழிகளில் இயேசுவும் ஒரு வழியல்ல, இயேசுவே வழி! இயேசுவே சத்தியம்! இயேசுவே ஜீவன்! இயேசு கிறிஸ்துவைத் தவிர வேறு எவராலும் இரட்சிப்பு இல்லை. நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும் மனிதருக்குள்ளே இயேசு கிறிஸ்துவின் நாமமேயல்லாமல் வேறு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை. இயேசு கிறிஸ்துவை அறியாதவன் தேவனை அறியவில்லை. மனிதருக்கு சரியாகத் தோன்றுகிற வழிகளுண்டு, அதன் முடிவோ மரண வழிகள் என்று பைபிள் கூறுகிறது.

எனவே நண்பரே! உங்களை தேவனுடைய இராஜ்யமாகிய மோட்சத்துக்குப் போகாதபடி தடுக்கிற விபச்சாரம், வேசித்தனம், விக்கிரக ஆராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், வெறிகள், களியாட்டுகள் குடிவெறி, போதைப் பொருட்களை உபயோகித்தல் முதலிய பாவங்களை விட்டு மனந்திரும்பி இன்றே இயேசுவிடம் வாருங்கள். அவர் சிலுவையில் சிந்தின இரத்தம் உங்கள் பாவங்களை நீக்கி உங்களைச் சுத்திகரிக்கும்.

இயேசு கிறிஸ்து இந்த உலகத்தை நியாயந்தீர்க்க வரப்போகிறார். ஒரே தடவை மரிப்பதும், பின்பு நியாயத்தீர்ப்பு அடைவதும் மனிதருக்கு நியமிக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் மனந்திரும்பி விசுவாசத்தோடு இயேசுவை உங்கள் சொந்த இரட்சகராகவும், ஒரே வழியாகவும் ஏற்றுக்கொண்டால் நித்திய ஜீவனைப்பெற்று, மோட்சம் சேர்ந்து என்றென்றும் அவரோடு வாழுவீர்கள். இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் நித்திய ஜீவனை உடையவன். இயேசுவை விசுவாசியாதவனோ ஜீவனைக் காண்பதில்லை; தேவனுடைய கோபம் அவன்மேல் நிலைநிற்கும். துன்மார்க்கரும், தேவனை மறக்கிற எல்லா மக்களும் நரகத்திலே தள்ளப்படுவார்கள்.

""நண்பரே, சிலர் தவறாக எண்ணுகிறதுபோல இது ஒரு மதப்பிரச்சாரமோ மதமாற்றமோ அல்ல, ஏனென்றால் உலகத்திலுள்ள எந்த மதமும் உங்களை இரட்சிக்காது. கிறிஸ்தவ மதமும் உங்களை இரட்சிக்க முடியாது! இயேசு கிறிஸ்து மட்டுமே உங்களை இரட்சிக்க முடியும்.''

(தேவன், தம்முடைய ஒரேபேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப் போகாமல் நித்தியஜீவனை அடையும்படிக்கு, அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார். யோவான் 3:16) எனவே காலம் கடத்தாமல் நீங்கள் ஒரு பாவி என்று ஒப்புக் கொண்டு மனந்திரும்பி விசுவாசத்தோடு இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்கள் பாவங்களையெல்லாம் மன்னித்து உங்கள் நோய்களையெல்லாம் குணமாக்கி, உங்கள் ஆத்துமாவை அழிவுக்கு விலக்கி மீட்பார். இந்த தெய்வீக விடுதலையை நீங்கள் பெற விரும்பினால் உண்மையான மனதுடன், விசுவாசத்தோடு கீழ்க்கண்டவாறு தேவனிடம் பிரார்த்தியுங்கள்.

தேவனே நான் ஒருபாவி, என் மேல் இரக்கமாயிரும். இயேசு என் பாவங்களுக்காகச் சிலுவையில் இரத்தம் சிந்தி, மரித்து, உயிர்த்தார் என்று விசுவாசித்து, அவரை என் சொந்த இரட்சகராகவும், தெய்வமாகவும் ஏற்றுக் கொள்கிறேன். இது முதல் நான் உம்முடைய பிள்ளை. இயேசுவின் நாமத்தில் ஆமென்!

உலகம் தரக்கூடாத சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் இயேசு கிறிஸ்துவின் மூலமாக இப்பொழுதே பெற்றுக் கொள்ளுங்கள்.